இந்தியா

வட இந்தியாவை வாட்டும் கடும் குளிர் அலை: டிசம்பர் 21 வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

வட இந்தியாவை வாட்டும் கடும் குளிர் அலை: டிசம்பர் 21 வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Veeramani

வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் டிசம்பர் 21 வரை குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் (டிஜி) மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, “தேசிய தலைநகர் டெல்லியில் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக சரிந்தது. வடமேற்கு இந்தியாவில் பகல் வெப்பநிலை இயல்பை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள் உட்பட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக குளிர் அலை மற்றும் கடுமையான குளிர் அலை நிலவி வருகிறது, இந்த பகுதிகளில் டிசம்பர் 21ஆம் தேதி வரை இந்த நிலைமை தொடரும்என தெரிவித்தார்.

ராஜஸ்தானில் உள்ள சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக -1.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸில் 0.7 டிகிரி செல்சியஸ் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மகாராஷ்டிராவிலும் டிசம்பர் 21 வரை குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும், வட ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சண்டிகரின் சில பகுதிகளில் டிசம்பர் 21 வரை குளிர் அலை முதல் கடுமையான குளிர் அலை வரை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.