ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில், ஆந்திர மாநில எல்லையையொட்டி பாப்ளி நீர்ப்பாசன திட்ட அணை கட்டப்பட்டது. சட்டவிரோதமாக இந்த அணை கட்டியதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிர எல்லைக்குள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது சந்திரபாபு நாடு ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
பாப்ளி அணை அமைந்துள்ள நந்தெட் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் புனே சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீன் கோராத நிலையிலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று நந்தெட் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான என்.லோகேஷ் கூறுகையில், ‘எனது தந்தையும், மற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். தெலுங்கானாவின் நலனுக்காக அவர் போராடினார். சிறையில் இருந்த போது வெளியே வர ஜாமீன் வேண்டுமென்று கூட அவர் கோரவில்லை’ என்றார்.