இந்தியா

பெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..!

பெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..!

Rasus

நடந்து முடிந்த மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி கண்டன. சுயேட்சைகள் 8 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

40 தொகுதிகளில் மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். இதில் 15 பெண்கள் அடங்குவர். இதுவரை நடந்து முடிந்த மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகப்படியான பெண் வேட்பாளர்கள் இருந்தது இந்தத் தேர்தலில்தான். ஆனாலும் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனிடையே அதிக இடங்களை கைப்பற்றியுள்ள மிசோ தேசிய முன்னணி ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. அதேசமயம் 2,20,401 பெண்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

மிசோ தேசிய முன்னணி ஆண் ஆதிக்க மனப்பான்மையுடன் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காததே, பெண்கள் யாரும் சட்டமன்றத்திற்கு செல்லாத நிலைக்கு காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம் 1 இடங்ககளை கைப்பற்றியுள்ள பாஜக, அதிகப்படியாக 6 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 6 பெண் வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் அப்போதும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. அதேமசயம் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தியிருந்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி கண்டிருந்தார்.