அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும்போது கத்திரிகோலால் ரிப்பன் வெட்டி வைக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழலில், கத்திரிகோல் கொண்டு வர தாமதமானதால், வெறும் கைகளாலேயே தெலங்கானா முதல்வர் ரிப்பனை கிழித்தது பேசுபொருளாகி உள்ளது.
தெலங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவுப் பெற்று சிர்சிலாவில் வீடுகளை பயனாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்த நிலையில், ரிப்பனை வெட்டுவதற்கான கத்திரிகோல் வழங்குவதற்கு அதிகாரிகள் மறந்து விட்டனர்.
அதை எடுத்து வருவதற்கும் தாமதமானதால், பொறுமை இழந்த முதல்வர் சந்திரசேகர ராவ், ரிப்பனை வெறும் கைகளால் கிழித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்றார். இது தொடர்பான காணொலி தற்போது அதிகம் பகிரப்படுகிறது.