இந்தியா

அமைச்சரவையைக் கூட்டாமல் மகாராஷ்டிராவில் 356 ரத்து : சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய பிரதமர்

அமைச்சரவையைக் கூட்டாமல் மகாராஷ்டிராவில் 356 ரத்து : சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய பிரதமர்

webteam

மகாராஷ்டிராவில் பாஜக அரசு நேற்று காலை பதவியேற்ற பின்னரே, அதிகாலை 5. 47 மணியுடன் குடியரசுத்தலைவர் ஆட்சி முறைப்படி விலக்கிக்கொ‌ள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. அதில் கடந்த 12-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சியை அதிகாலை 5.47 மணியுடன் விலக்கிக்கொள்ள குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

உடனே இந்த அறிவிப்பு குறித்து அப்போது கேள்வி எழுந்தது. பதவிப் பிரமாணம் முடிந்து செய்தியாளர்களை தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்த பின்னர்தான், குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்ட தகவலே வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் காலை 8.16 மணிக்கு ஃபட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதன் பிறகே குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானது. ஆக, இதை அனைத்தையும் சேர்த்து மகாராஷ்டிரா விவகாரம் பேசு பொருளாக மாறியது. 

மேலும், ஆட்சி அமைப்பதற்கு பாஜகவை அழைப்பதற்கு முன்பே இந்த அறிவிப்பை ஆளுநர் தரப்பில் இருந்து ஏன் வெளியாகவில்லை எனப் பலர் சந்தேகம் எழுப்பினர். ‘குதிரை பேர’ அரசியல் ஆட்டத்திற்கு இடையே இந்தச் செய்தி அவ்வளவு வலுவாக மக்களிடம் சென்று சேரவில்லை. நேற்றைய பரப்பரப்பு முடிந்த நிலையில் மீண்டும் இந்த விவாதம் எழுந்தது. 

மத்திய அமைச்சரவைக் கூடி முடிவெடுத்து அதனை குடியரசுத் தலைவருக்கு தீர்மானமாக அனுப்பி வைத்த பிறகே குடியரசுத் தலைவரின் ஆட்சி விலக்கப்படுவது இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் நேற்று அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவும் இல்லை. குடியரசுத் தலைவருக்கு எந்தத் தீர்மானமும் அனுப்பி வைக்கப்படவும் இல்லை. ஆனால் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் சகலமும் நடந்தேறியது.

இந்த விவகாரம் குறித்து சில விளக்கங்கள் இப்போது கிடைத்துள்ளன. பிரதமருக்கு இருக்கும் வர்த்தக வியாபார பரிவர்த்தனைக்கான சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டாமலேயே 356 சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியை விலக்கிக் கொள்ளும்படி குடியரசுத் தலைவரிடம் முறையிட முடியும் என்பது தெரிய வந்துள்ளது. 

அதாவது, இந்திய அரசியமைப்பு சட்டம் 7ன் விதியில் ( வர்த்தவத்திற்கான பரிவர்த்தனை) இரண்டாவது அட்டவனைபடி இந்த அதிகாரம் பட்டியலிடப்பட்டுள்ளது. அவசரகால பிரகடன காலத்தில் இதை போன்ற முடிவை பிரதமர் எடுக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டியத் தேவை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் சட்டவிதி 12ன் கீழ் அதாவது வர்த்தகத்திற்கான பரிவர்த்தனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே பிரதமர் மோடி இந்த அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள வைத்துள்ளார். சட்ட ரீதியாக இந்தத் தடைகள் விலக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஃபட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.