இந்தியா

இன்னும் 2 வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்துவிடும் - நிதின் கட்கரி

இன்னும் 2 வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்துவிடும் - நிதின் கட்கரி

webteam

அடுத்த 2 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் - டீசலில் ஓடும் வாகனங்களுக்கு இணையாக குறைந்துவிடும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது மின்சார வாகனங்கள் விலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி “தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிபொருளின் ஏற்படும் விரைவான முன்னேற்றங்கள் மின்சார வாகனங்களின் விலையைக் குறைக்கும். அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள், மின்சார ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்ஷா ஆகியவற்றின் விலை பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்ஷாவுக்கு சமமாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

“லித்தியம்-அயன் பேட்டரியின் விலைகள் குறைந்து வருகின்றன. அலுமினியம்-அயன், சோடியம்-அயன் பேட்டரிகள், துத்தநாக அயனியின் வேதியியலை நாங்கள் உருவாக்குகிறோம். பெட்ரோல் என்றால் ரூ. 100 செலவழிக்கிறீர்கள் என்றால் மின்சார வாகனத்திற்கு ரூ.10 மட்டுமே செலவழித்தால் போதும் என்ற நிலை வரும்” என்று கட்கரி கூறினார்.

மேலும் அவர் “செலவு குறைந்த உள்நாட்டு எரிபொருளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஹைட்ரஜன் எரிபொருள் விரைவில் நடைமுறைக்கு வரும். அது மாசு அளவைக் குறைக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். போக்குவரத்துக்கு ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை பின்பற்றுமாறு எம்.பி.க்களை வலியுறுத்திய கட்கரி, அந்தந்த மாவட்டங்களில் கழிவுநீரை பச்சை ஹைட்ரஜனாக மாற்றுவதற்கு முன்முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹைட்ரஜன் விரைவில் மலிவான எரிபொருள் மாற்றாக இருக்கும், என்றார் கட்கரி.