இந்தியா

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

webteam

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரும், தங்களுக்கு இன்னும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், தங்களது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை, 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு தடை விதித்தது.

இதனிடையே 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிடுவதற்கு அனுமதிகோரி மத்திய அரசு மற்றும் திஹார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரும் தங்களுக்கான வாய்ப்புகளை 7 நாளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார். இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, பாட்டியாலா நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரில்,‌ மூவரின் நீதி வாய்ப்புகள் நிறைவடைந்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நால்வரும் வெள்ளிக்‌கிழமைக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு‌ நீதிபதி தர்ம‌ந்திர‌ ரானா உத்தரவிட்டார்.