சன்னி தியோல் pt web
இந்தியா

மக்களவை கூட்டத்தொடர்கள் | ஒருமுறை கூட கேள்வி எழுப்பாத 9 எம்.பி.க்கள் பட்டியலில் 6 பேர், பாஜக-வினர்!

17 ஆவது மக்களவையின் கூட்டத்தொடர்களில், 9 எம்.பிக்கள் ஒருமுறை கூட கேள்வி எழுப்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Angeshwar G

திரைப்பட நடிகர்களும், அரசியல்வாதிகளுமான சன்னிதியோல், சத்ருகன் சின்ஹா உட்பட 9 எம்.பிக்கள் 17 ஆவது மக்களவையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் உள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை

2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்குப் பின், 17 ஆவது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 17, 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் பாஜகவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மக்களவை கூட்டத்தொடர்களில் எந்த ஒரு விவாதத்திலும் பங்குகொள்ளவில்லை என மக்களவை பதிவுகள் தெரிவிக்கின்றன.

9 எம்.பி.க்கள் யார் யார்?

பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்களான ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினகி (பிஜாப்பூர் எஸ்சி, கர்நாடகா), பிஎன் பச்சேகவுடா (சிக்கபல்லாபூர், கர்நாடகா), பிரதான் பருவா (லக்கிம்பூர், அசாம்), சன்னி தியோல் (குர்தாஸ்பூர், பஞ்சாப்), அனந்த் குமார் ஹெக்டே (உத்தர கன்னடம், கர்நாடகா), வி ஸ்ரீனிவாச பிரசாத் (சாமராஜநகர் எஸ்சி, கர்நாடகா),

தற்போது சிறையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி அதுல் குமார் சிங் (கோசி, உ.பி.),

டிஎம்சியின் சத்ருகன் சின்ஹா (அசன்சோல், மேற்கு வங்கம்), டிபியேந்து அதிகாரி (தம்லுக், மேற்கு வங்காளம்).

சத்ருஹன் சின்ஹா

இதில் சத்ருஹன் சின்ஹா மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் 2022 ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றார். சன்னி தியோல் குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் முதன்முறை நின்று வெற்றி பெற்றவர்.

சபாநாயகர் ஓம்பிர்லா சன்னி தியோலை இருமுறை அழைத்து அவர் விரும்பும் எந்த வடிவத்திலும் சபையில் பேசும்படி அவரைக் கேட்டுக்கொண்டார் எனவும் ஆனால் சன்னி தியோல் பேசவில்லை என்றும் ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒன்பது எம்.பி.க்களில் சன்னி தியோல் உட்பட 6 பேர் பூஜ்ய நேர விவாதங்களில் சில எழுத்துப்பூர்வ கேள்விகளை சமர்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 3 பேர் (சத்ருகன் சின்ஹா, அதுல் சிங் மற்றும் ரமேஷ் சந்தப்பா) 17 ஆவது மக்களவயில் எழுத்துப் பூர்வமாகவோ அல்லது வாய்மொழி வடிவிலோ எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சாரா அமைப்பான PRS Legislative Research தொகுத்த புள்ளி விவரங்களின்படி, 17வது மக்களவையில் சராசரியாக 45 விவாதங்களில் எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். கேரளா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த எம்.பி.க்கள் சராசரியாக அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.