இந்தியா

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா தமிழகத்தில் தலைமறைவா?

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா தமிழகத்தில் தலைமறைவா?

Rasus

கேரளாவில் புயலைக் கிளப்பி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா, காரில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடு செல்லும் வழியில் தமிழகத்தின் செங்கோட்டை பகுதிக்கு ஸ்வப்னா சென்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு போகும்போது பாலோடு பகுதியில் நிறுத்தி வழி கேட்டு பேசிச் சென்றதாகவும், காரில் குழந்தைகள் இருந்ததாகவும் அப்பகுதிவாசியான நந்தினி என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். நந்தினியோடு ஸ்வப்னா பேசியதை அப்பகுதி மக்களும் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து ஸ்வப்னா குறித்த தகவல் தமிழக காவல்துறைக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் பகிரப்பட்டு உதவி கோரப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5-ஆம் தேதி டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் வந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் கேரள விமான நிலையத்தில் பிடிபட்டது. தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றுபவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்த தங்கக்கடத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கேரள காவல்துறையும், சுங்கத்துறையும் தேடி வரும் நிலையில், ஸ்வப்னாவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.