இந்தியா

பழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி!

பழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி!

webteam

சர்வீஸ் சென்டரில் கொடுக்கப்பட்ட செல்போனின் பேடிஎம் செயலியில் இருந்து 91 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

28 வயதான டெல்லியைச் சேர்ந்த யூசுப் கரிம் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் அவரது செல்போனில் உள்ள பணவரிவர்த்தனை செய்யும் செயலியில் இருந்து ரூ.91ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து  யூசுப் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி பழுதான தனது செல்போனை சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது நீக்கி திரும்ப பெற்றதாகவும், அப்போது பணவரிவர்த்தனை செயலியான பேடிஎம்மில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அந்த மின்னஞ்சலில் உங்களது பேடிஎம் கணக்கில் வேறு ஒருவர் உள்நுழைவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பேடிஎம் கணக்கு வேறு எண்ணுக்கு மாற்றப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டு அந்த கணக்கில் இருந்து ரூ.19999 பரிமாற்றம் நடந்துள்ளது. யூசுபுக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்குள்ளேயே அவரது கணக்கில் இருந்து 7 முறை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு 80498 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யூசுப், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் தனது செல்போனை சர்வீஸ் சென்டரில் கொடுக்கப்பட்ட பிறகே இந்த மோசடி நடந்துள்ளதாகவும், அங்கு உள்ள யாரோ தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்றும் யூசுப் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பலமுறை பேடிஎம் நிறுவனத்துக்கு புகார் கொடுத்தும் அவர்கள் அந்த கணக்கை தடை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பேடிஎம் நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ரகசியம் என்று ஏதுமில்லாமல் நம்முடைய அனைத்து தகவல்களும் செல்போனில் இருக்கிறது. அதை தவிர்க்க முடியுமா முடியாதா என்பதை தாண்டி, நாம் அதனை முடிந்தவரை விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் பயன்படுத்த வேண்டுமென்பதே தேவையாக இருக்கிறது.