இந்தியா

பெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் - தெலங்கானா டிஜிபிக்கு நோட்டீஸ்

பெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் - தெலங்கானா டிஜிபிக்கு நோட்டீஸ்

webteam

தெலங்கானாவில் பெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்ட விவகாரத்துக்கு விளக்கமளிக்குமாறு அம்மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலங்கானா மாநில வனத்துறை அதிகாரி அனிதா. இவர் அங்குள்ள, சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சரசலா கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். தெலங்கானா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தின் சில இடங்களில் மரம் நட சென்ற அவர், கிராமத்தில் உள்ள அரசு நிலங்களைத் தேர்வு செய்துள்ளார்.

இதற்கு கிராமத்தினர், எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள், எம்.எல்.ஏவின் சகோதரர் கோனரு கிருஷ்ணா ராவுக்கு அழைப்பு விடுத்தனர். தன் ஆதரவாளர்களுடன் வந்த அவர், வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து கையில் கிடைத்த கம்பால் வனத்துறை அதிகாரி அனிதாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. கொனேரு கண்ணப்ப‌ாவின் சகோதரர் கிருஷ்ணா ராவ் கைது செய்‌ப்பட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தெலங்கானா மாநில டிஜிபி மகேந்திர ரெட்டிக்கு தேசிய பெண்கள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.