மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக - சிவசேனா கூட்டணி, தேர்தல் முடிவுக்குப் பிறகு முறிந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது சிவசேனா. இந்த புதிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவசேனா தலைவர்கள் சிலர் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கட்சிகளின் தலைவர்களும் நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது எனவும், மகாராஷ்டிரா விகாஷ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.