இந்தியா

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: விசாரணையை துவக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: விசாரணையை துவக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

webteam

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பாக தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 5 பேர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள பதற்றத்தை குறைக்க விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடித்த இடத்தை நேரில் ஆய்வுசெய்த பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிறகு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அனைவருக்கும் இலவசமாக முழு சிகிச்சையும் வழங்கப்படும் என உறுதி அளித்த முதல்வர், இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் தங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக உளவுத்துறையுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விவரங்கள் தெரியவரும் எனவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்துள்ள போலீஸ் கமிஷ்னர் குரு ப்ரீத் சிங், மற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆதாரங்களை சேகரிப்பது, சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்வது உள்ளிட்ட விசாரணையை மேற்கொண்டார்.

அதேபோல இந்த விவகாரத்தில் தீவிரவாதம் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு இரண்டு உறுப்பினர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருவரும் குண்டு வெடித்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதேபோல தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் நேரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குண்டு வெடித்தபோது அடையாளம் தெரியாத வகையில் உடல் சிதறி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் யார்? அவர்தான் குண்டு வெடிக்க செய்தாரா? போன்ற முக்கிய கேள்விகளை முன்னிறுத்திதான் அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரணையை முதல் கட்டமாக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை கேட்டுள்ளார்.

இதற்கிடையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

- நிரஞ்சன் குமார்