“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சாதிக்கத் துடிப்பவர்கள் வாய்ப்புகள் கதவைத் தட்டும் வரை மெளனமாகக் காத்துக் கொண்டிருப்பதில்லை. தங்கள் இலக்கை அடைவதற்குத் தேவையான வாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த 22 வயதான நந்தினி கவுர். பிறவியிலேயே இரண்டு கைகள், கால்கள் செயலிழந்தபோதிலும், சற்றும் தளர்ந்துவிடாமல் ஓவியக் கலையில் தனக்கென ஓரிடத்தை பெற்று சாதித்துக் கொண்டிருக்கிறார் நந்தினி. 'உடலில்தான் குறைபாடே தவிர, மனதில் இல்லையே' என தன்னம்பிக்கையை நெஞ்சில் ஏந்தி வாயால் ஓவியம் வரைந்து அசத்துகிறார் அவர்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தினி தனது வாயால் வரைந்த ஓவியம் பிரதமரின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நந்தினியின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். பிரதமரின் அந்த ட்வீட்தான் தற்போது நந்தினியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">बहुत मनमोहक पेंटिंग! अजमेर की प्यारी बिटिया नंदिनी के बधाई संदेश को देखकर अभिभूत हूं! मेरी ओर से उन्हें ढेर सारी शुभकामनाएं! <a href="https://t.co/EugMGRClL1">https://t.co/EugMGRClL1</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1654338989606723585?ref_src=twsrc%5Etfw">May 5, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுகுறித்து நந்தினி கவுர் கூறுகையில், "நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். நான் சுதந்திரமாக இயங்க விரும்பினேன். ஓவியம் வரைவது எனது பொழுதுபோக்கு, அதனால் நான் அந்த துறையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே ஓவியக்கலை தொடர்பான படிப்பையும் பயின்று வருகிறேன். நான் ஓவியக்கலையில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அனுதாபத்தின் அடிப்படையில் அங்கீகாரம் கிடைப்பதை நான் விரும்பவில்லை. திறமையின் அடிப்படையில் கிடைக்கும் அங்கீகாரத்தையே நான் விரும்புகிறேன்'' என்கிறார் வைராக்கியத்துடன்.
நந்தினியின் தந்தை பிரகாஷ் சந்த் கவுர் கூறுகையில், " அவளுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இருந்தது. நந்தினி முதலில் வரைந்தது என்னைத்தான். அதைப் பார்த்ததும் நாங்கள் ஆச்சரியப்பட்டோம். பிறகு அவளுடைய ஓவியத் திறமையை வளர்க்க பக்கபலமாக நின்றேன்'' என்றார்.
மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கை தனது இன்ஸ்பிரேஷனாக குறிப்பிடும் நந்தினி, தற்போது ஜெய்ப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடப்பிரிவில் ஓவியக்கலை படித்து வருகிறார்.