இந்தியா

'சிறு வயதில் மண் வீட்டில் இருந்தபோது!'-தாயாரின் 100வது பிறந்தநாளில் நெகிழ்ந்த மோடி

'சிறு வயதில் மண் வீட்டில் இருந்தபோது!'-தாயாரின் 100வது பிறந்தநாளில் நெகிழ்ந்த மோடி

ஜா. ஜாக்சன் சிங்

தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி பழைய சம்பவங்களை நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று அவரிடம் ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது தாயார் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த நாளில் எனது தாயார் ஹீராபென் மோடி 100-வது ஆண்டில் நுழைந்திருக்கிறார். இந்த சிறப்புமிக்க நாளில் மகிழ்ச்சியும், உணர்ச்சியும் மிகுந்த சில நினைவுகளை நான் எழுதுகிறேன். எனது தாயார் ஹீராபென் மோடி ஒரு எளிமையான அதே சமயத்தில் அசாதாரண பெண்மணி ஆவார். சிறு வயதிலேயே தனது தாயை அவர் இழந்துவிட்டார். இவ்வாறு, இளமைக்காலத்தில் இருந்தே பல கடினமான சூழல்களை அவர் கடந்து வந்திருக்கிறார். ஆனால், எந்தவொரு சூழலும் அவரை முடக்கிவிடவில்லை. அனைத்து கஷ்டங்களையும் சமாளித்து மீண்டெழும் திறன் அவருக்கு இருந்தது. குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர் ஏராளமான தியாகங்களை செய்திருக்கிறார். அவரது மனவலிமை தான் எனது தன்னம்பிக்கையைும், மன உறுதியையும் அதிகப்படுத்தியது எனக் கூறினால் அது மிகையாகாது.

அவரது மன உறுதியும், தொலைநோக்கு பார்வையும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. வாத்நகரில் சிறிய மண் வீட்டில்தான் நாங்கள் வசித்தோம். அப்போது வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல் சிறிய அளவு பணம் சம்பாதிப்பதற்காக அவர் பல வீடுகளில் பாத்திரம் கழுவியிருக்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் எங்களுக்கு நல்ல உணவுகளை செய்து கொடுப்பார். மழைக்காலங்களில் எங்கள் வீட்டில் தண்ணீர் ஒழுகும். அப்போது வாளி முதலிய பாத்திரங்களை அதில் வைத்து இரவு முழுக்க மழை நீரை எனது தாயார் சேகரிப்பார். இத்தனை கஷ்டங்களிலும் அவரது மனவலிமை துளியளவும் குறைந்ததில்லை. முறையாக படிக்காவிட்டாலும் வாழ்கையில் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதை எனது தாயாரை பார்த்து தெரிந்து கொண்டேன். அவரது எண்ணங்களும், தொலைநோக்கு பார்வையும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

எப்போதும் எளிமையான வாழ்க்கையையே எனது தாயார் வாழ்ந்திருக்கிறார். இப்போது கூட அவருக்கு சொந்தமாக எந்த தங்க நகைகளும் கிடையாது. எளிமையாக இருப்பதையே அவர் என்றும் விரும்புகிறார். இவ்வாறு தனது பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.