மும்பையில் அடைமழை தொடங்கிவிட்டது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்துவருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவகாலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மிகவும் அதிகம் எனக் கூறப்படுகிறது. நகரில் 215.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பெரிய கட்டங்களில் இருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மும்பையின் தெற்குப் பகுதி மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
நகரின் பல பகுதிகளில் பள்ளிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மிரா பயாந்தர் நகரில் கனமழை காரணமாக நான்கு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்துள்ளது. அர்னாலா கடற்பகுதியில் மழையில் சிக்கிய 16 மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
சில நாட்களுக்கு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை வரை பலத்த காற்றுடன் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.