இந்தியா

3 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு

3 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு

webteam

முல்லைப்பெரியாறு அணையில் இன்று தேசிய பாதுகாப்பு படை குழுவினரின் ஆய்வு நடைபெறுகிறது. 

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் 136 அடியில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பின் 142 அடியாக உயர்த்தப்பட்டது. அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருந்தபோது, அணைக்குள் கேரளாவின் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அத்துமீறி நுழைந்ததாகவும், அணையின் பாதுகாப்பு பணியில் இருக்கும் கேரள போலீஸாரால் அணைக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. இதனால் அணையில் கேரள போலீஸாரை மாற்றிவிட்டு மத்திய தொழிற்படை பாதுகாப்பு வழங்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அணையில் கேரளாவின் பாதுகாப்பு பணிகள் குறித்து 2014ஆம் ஆண்டு டிசம்பரில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அணையின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதாக கூறிய கேரள அரசு, கேரள டி,எஸ்.பி., தலைமையில் இயங்கும் 123 பேர் கொண்ட மிகப்பெரிய முல்லைப்பெரியாறு காவல் நிலையத்தை துவக்கி,உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இதற்கிடையில் அணையில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது என கூறிய மத்திய உளவுத்துறையும் மத்திய அரசிற்கு தனது அறிக்கை தாக்கல் செய்தது. இந்த உளவுத்துறையின் அறிக்கையையும் சுட்டிக்காட்டிய தமிழக அரசு, மத்திய தொழிற்படை பாதுகாப்பு கேட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின் முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு படையின் ஆய்வு நடக்கிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, தேசிய பாதுகாப்பு படையின் சென்னை படைப்பிரிவு கமாண்டர் பால்சன் ஜேம்ஸ் தலைமையில் நடக்கும் ஆய்வில், அணையில் பாதுகாப்பில் இருக்கும் கேரள போலீஸாரின் பணிகள், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், கேரள போலீஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.