இந்தியா

ம.பி வெள்ளம்: மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்; மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

ம.பி வெள்ளம்: மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்; மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

Veeramani

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாகனத்தின் மீது சேற்றினை வீசினார்கள். இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஷியோப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவில், ஷியோப்பூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா மாநிலச் செயலகத்தில் துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது குவாலியர் மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவம் வர்மா ஷியோபூரின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷியோப்பூரின் காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத் உபாத்யாயா இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது குவாலியரின் ஏஐஜியாக இருக்கும் அனுராக் சுஜானியா ஷியோப்பூரின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஷியோப்பூரில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் வாகன அணிவகுப்பைத் தடுக்க முயன்ற பொதுமக்கள், அவருக்கு கருப்புக் கொடி காட்டி வாகனத்தின் மீது சேற்றை வீசி போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தாமதமாக பாதிப்பை ஆய்வு செய்ய வந்ததாகக்கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

தோமரை ஷியோப்பூர் நகரத்தின் முக்கிய சந்தையில் உள்ளே நுழையவிடாமல் மக்கள் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றனர். இது குறித்து, “ அரசின் தவறான நிர்வாகம் காரணமாக, அம்ரல் மற்றும் சீப் ஆற்றில் வெள்ள பாதிப்பு அதிகமானது. வெள்ளம் குறித்து சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கவில்லை” என்று பொதுமக்கள் தோமரிடம் புகார் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எட்டு மாவட்டங்களில் 1,250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 9,000 மக்கள் மிக மோசமான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.