100 ராணுவ வீராங்கனைகள் பதவிகளுக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் இதுவரை அதிகாரிகள் பதவிகளுக்கே பெண்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர். போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படையில் பெண்கள் சேர்க்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், பொதுப் பணிகளுக்காக பெண் வீராங்கனைகளை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் 100 ராணுவ வீராங்கனைகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய ராணுவம், விண்ணப்பங்களை ஜூன் 6க்குள் அனுப்ப வேண்டுமென தெரிவித்தது. பின்னர் விண்ணப்பத்துக்கான கடைசி தேதி ஜூன் 30வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் 100 வீராங்கனைகள் பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் இந்த மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெல்காமில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வீராங்கனைகளின் தேர்வு அம்பலா, லக்னோ, ஜபால்பூர், ஷில்லாங் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்