நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற 25 தமிழர்கள் மோசமான வானிலை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பதாகவும், சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கு சிக்கியுள்ள தமிழர்களில் ஒருவரான குணசேகரன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தின் கைலாஷ்-மானசரோவர் பகுதிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்டவர்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். பர்சா, சிந்துலி போன்ற இடங்களில் கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமானம் இயக்க முடியாததால், நாடு திரும்ப முடியாமல் சிமிகோட் பகுதியில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 25 பேர் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழர்கள் தாங்கள் சென்ற டிராவல்ஸ் உரிமையாளரின் சகோதரர் வீட்டில் பத்திரமாக உள்ளனர். எனினும் ராணுவ ஹெலிகாப்டர் வந்தால் மட்டுமே தங்களால் தாயகம் திரும்ப முடியும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களில் ஒருவரான நாமக்கல்லைச் சேர்ந்த குணசேகரன் தெரிவித்துள்ளார்.