அண்மையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுளளதாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் 'அல்ட் நியூஸ்' என்ற செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவானது சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி அவரை டெல்லி போலீஸார் கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது முகமது ஜுபைர் சார்பில் ஜாமீன் கோரப்பட்டது.
இதற்கு டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இது வெறும் ட்விட்டர் பதிவு தொடர்பான வழக்கு அல்ல. பாகிஸ்தான், சிரியா, வளைகுடா நாடுகளிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான நிதி, 'அல்ட் நியூஸ்' செய்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ப்ரவ்தா மீடியாவுக்கு கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தில் முகமது ஜூபைர் தான் இயக்குநராக இருக்கிறார். ஆனால் அந்த நிதியுதவி தொடர்பான ட்விட்டர் பதிவுகளை அவர் சாமர்த்தியமாக அழித்துள்ளார். எனவே அவர் மீது குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி நீதிமன்றம், முகமது ஜூபைரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டது.