இந்தியா

59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு

59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு

webteam

சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி பரிசாக 59 நிமிடத்தில் ரூ. 1 கோடி கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

டெல்லியில் இன்று சிறுதொழில் நிறுவனங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அப்போது, சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி பரிசாக 59 நிமிடத்தில் ரூ. 1 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 59 நிமிடத்தில் ரூ. 1 கோடி வரை கடன் பெற முடியும் எனவும் ஜி.எஸ்.டி பட்டியலில் பதிவு செய்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ. 1 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன் தொகைக்கு 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

2014ஆம் ஆண்டில் தொழில் புரிய எளிதான நாடுகள் பட்டியலில் 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 77ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தொழில் துறைக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் நம்பாமல் விமர்சித்ததாக  பிரதமர் கூறினார். மற்ற நாடுகள் அடையாத இடத்தை இந்தியா அடைந்திருப்பதாகவும், உலக வங்கியின் 50 நாடுகள் பட்டியலுக்குள் இந்தியா இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

சிறுதொழில் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுதொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா முன்னேற்றத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் 63 மில்லியனுக்கும் மேலான பரந்த இணைப்பை கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் 111 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.