இந்தியா

மிசோரம்: மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சரின் மகள்: மன்னிப்பு கேட்ட முதல்வர்

மிசோரம்: மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சரின் மகள்: மன்னிப்பு கேட்ட முதல்வர்

ச. முத்துகிருஷ்ணன்

அப்பாயின்மென்ட் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை மிசோரம் முதல்வரின் மகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்ததை அடுத்து, அம்மாநில முதல்வர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருக்கும் ஒரு கிளினிங்கில் உள்ள தோல் நோய் சிறப்பு மருத்துவரை பார்க்கச் சென்றுள்ளார். ஆனால் அவர் முன்கூட்டியே பதிவு செய்யாமல் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. உரிய அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என அங்கிருந்த மருத்துவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட மிலாரி, அடுத்ததாக சிகிச்சை அளிக்க மருத்துவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மற்ற மருத்துவர்கள் தடுக்க முயன்றபோதும், அவர்களையெல்லாம் தாண்டிச் சென்று அந்த மருத்துவரை தாக்கத் துவங்கியுள்ளார் மிலாரி. புதன்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.

முதல்வர் மகளின் இந்தச் செயலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மிசோரம் பிரிவு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் நேற்று மருத்துவர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இந்நிலையில் மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தனது மகளின் இந்த செயலிற்காக பகிரங்க மன்னிப்பு கோரினார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைப்பட எழுதிய கடிதத்தை பகிர்ந்து அவர் தமது மன்னிப்பை கோரியுள்ளார். தனது மகளின் தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்பதாகவும் அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.