இந்தியா

“எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை” - போலீசில் ஆஜரான ஜனார்த்தன ரெட்டி

“எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை” - போலீசில் ஆஜரான ஜனார்த்தன ரெட்டி

webteam

மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, காவல்துறையினர் முன் நேரில் ஆஜரானார்

அமலாக்கத்துறை துறையின் வழக்கில் இருந்து தனது நிறுவத்தை மீட்பதற்காக கர்நாடக முன்னாள் அமைச்சரும் இரும்பு சுரங்க நிறுவன உரிமையாளருமான ஜனார்த்தன ரெட்டி மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கர்நாடகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனால், அவரது கைது தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே ஜனார்த்தன ரெட்டி தலைமறைவானதாக கூறப்பட்டது. கடந்த 3 நாட்களாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜனார்த்தன ரெட்டியை பல இடங்களிலும் காவல்துறையினர் தேடி வந்ததாக செய்திகள் வெளியானது. 

இதனையடுத்து, ஜனார்தன ரெட்டி சார்பில் சிட்டி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஜனார்த்தனரெட்டி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போலீஸ் உயர் அதிகாரிகளான டிஜிபி க்ரிஷ் மற்றும் ஏசிபி வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஜனார்த்தன ரெட்டியிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டுமென்றும் அவர்கள் நியாயத்தின் பக்கம் விசாரிக்காமல் அரசியல் அழுத்தங்களால் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட ஜனார்தன ரெட்டி, காவல்துறையினர் முன் இன்று நேரில் ஆஜரானார். தலைமறைவாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், ஜனார்தன ரெட்டி தன் வழக்கறிஞர்களுடன் காவல்துறையினர் முன் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு எதிராக அரசியல் சதி நடப்பதாக தெரிவித்தார். 

முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை என்றும், தனக்கு எதிராக எந்த ஆதாரமும் காவல்துறையினரிடம் இல்லை என்றும் கூறியிருந்தார்.