இந்தியா

குழந்தைகளின் உணவுக்காக செல்போனை விற்றுவிட்டு, தற்கொலை செய்துக் கொண்ட தொழிலாளி !

குழந்தைகளின் உணவுக்காக செல்போனை விற்றுவிட்டு, தற்கொலை செய்துக் கொண்ட தொழிலாளி !

jagadeesh

புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தன் குடும்பத்துக்கு உணவு வாங்கிக் கொடுக்க ரூ.2500க்கு தன்னுடைய செல்போனை விற்றுவிட்டு பின்பு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சில தொழிலாளர்கள் நடை பயணமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுப்பது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

மேலும், சிலர் குடும்பத்துடன் தாங்கள் வேலை பார்க்கும் மாநிலங்களிலேயே தங்கி வருகின்றனர். தினசரி வருவாயை நம்பி வாழ்ந்து வந்த அவர்களுக்கு இந்த ஊரடங்கு காலம் பெரும் கஷ்டத்தை கொடுத்து வருகிறது. ஒருவேளை உணவுக்கு வழியின்றி சில குடும்பங்கள் தவித்து வருகின்றன. இப்படிதான் தினசரி தொழிலாளியான சாபு மண்டல், பீகாரைச் சேர்ந்தவர். இவர் குர்கானில் பெயின்ட்டராக வேலை பார்த்து வந்தார். இவரின் குடும்பம் குர்கானுக்கு வெளியே சிறு வீடு ஒன்றில் தங்கி இருந்தது. ஊரடங்கு காரணமாக சாபு மண்டலுக்கு வருவாய் இல்லை. அதன் காரணமாக அவரின் குடும்பத்தினருக்கும் உணவு இல்லாமல் போய்விட்டது.

இதனையடுத்து தான் வைத்திருந்த செல்போனை ரூ.2500-க்கு விற்ற சாபு மண்டல், ஒரு சிறிய பாட்டரி மின் விசிறியையும், உணவுப் பொருள்களையும் வாங்கி வீட்டுக்கு கொடுத்துள்ளார். சாபு மண்டலுடன் அவருடைய வீட்டில் மனைவி , 4 குழந்தைகள், பெற்றோரும் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு இப்போதுதான் 5 மாதமாகிறது. சாபு மண்டல் வீட்டுக்கு உணவுப் பொருள்களை வாங்கி வந்ததும், அவரின் மனைவி பூணம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஏன்னென்றால் மொத்த குடும்பமே கடந்த சில நாள்களாக உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

ஆனால், பூனமின் மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது கழிவறைக்கு சென்ற சாபு மண்டல் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சாபு மண்டலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரின் தற்கொலை குறித்து பேசிய பூணம் "ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மன அமைதியின்றி தவித்து வந்தார். அவரால் எங்களுக்கு உணவு வாங்கி கொடுக்க முடியவில்லை. அவருக்கு வேலையும் இல்லை கையில் பணமும் இவல்லை. நாங்கள் அரசு தரும் இலவச உணவையே நம்யிருந்தோம், ஆனால் அதுவும் எங்களுக்கு தினசரி வருவதில்லை" என்றார்.

இந்தத் தற்கொலை குறித்துப் பேசிய குர்கான் போலீஸார் " உயிரிழந்த தொழிலாளி மன நலம் சரியில்லாதவர். பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்தத் தற்கொலை தொடர்பாக எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதியப்படவில்லை" என கூறினர்.