பாலியல் தொல்லைகளை சந்தித்த பெண்கள், மீ டூ என்ற தலைப்பில் குற்றச்சாட்டுகளை பதிவிட்டது பரபரப்பாகி வந்த நிலையில், இது தொடர்பாக 21 பேர் மட்டுமே தேசிய மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளது தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீ டூ விவகாரம். இந்தியா முழுவதும் பல துறைகளில் மீ டூ விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மீ டூ ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தமிழகத்திலும் கோலிவுட் வட்டாரத்தை இவ்விவகாரம் சுழன்று அடித்தது. இதற்கிடையே மீடூ புகார்கள் சரியானவையா? அல்லது காலதாமதாமனவையா? என்ற விவாவதங்கள் எழுந்தன.
இதனையடுத்து பாலியல் புகார்கள் தொடர்பாக சமூக வலை தளங்களில் குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்கள், ncw.metoo@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபருக்கு பின் தற்போது வரை வெறும் 21 பேர் மட்டுமே குறிப்பிட்ட இமெயில் ஐடிக்கு புகார் அளித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் படி இந்த விவரத்தை தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
புகார் கொடுக்கப்பட்ட 21 புகார்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது மீ டுவில் பாலியல் புகார்கள் எதுவும் பதிவிடப்படவில்லை என்றும் கடந்த அக்டோபரில் 140க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், ''தங்கள் மீதான புகாரை யாரும் பதிவுசெய்ய விரும்பாமல் இருக்கலாம். அதன் விசாரணைகளுக்காக தாங்கள் மீண்டும் மீண்டும் மனதளவில் துன்பப்பட விரும்பாத பெண்கள் மகளிர் ஆணையத்தை அணுகாமல் தவிர்த்திருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.