மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழில் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்ததால் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது
நாடாளுமன்ற மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி தமிழில் அன்னிய நேரடி முதலீடு பற்றி ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி சரியாக புரியவில்லை எனவே மீண்டும் கேட்குமாறு கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய கணேசமூர்த்தி, "நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அமைச்சர்கள் ஆங்கிலத்தில்தான் பதிலளிக்க வேண்டும். நான் தமிழில் கேள்வி கேட்டால், அமைச்சர் இந்தியில் பதில் அளிக்கிறார்" என்று குறிப்பிட்டார். அதற்கு அமைச்சர் பியூஷ் கோயல், உறுப்பினருக்கு ஹெட்போன் மூலம் மொழிபெயர்ப்பு கிடைக்கும் என்பதால், நான் இந்தியில்தான் பதிலளிப்பேன் என உறுதியாக தெரிவித்தார்
இதனைத்தொடர்ந்து ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் இந்தியில் பதிலளித்த விவகாரத்தையும் எழுப்ப முயன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷமெழுப்பியதால் அவையில் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக, "ஒரு மொழியில் கேட்கப்படும் கேள்விக்கு அதே மொழியில் பதிலளிக்கப்பட வேண்டும் என்று ஏதேனும் விதி உள்ளதா? " என கோபமடைந்து கேள்வியெழுப்பிய பியூஸ் கோயல், நான் இந்தியில்தான் பதிலளிப்பேன் என உறுதியாக கூறினார்.
கணேசமூர்த்தி மீண்டும் இப்பிரச்னையை எழுப்பியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா சிரித்துக்கொண்டே, கணேசமூர்த்தியிடம் ஹெட்ஃபோனைப் போட்டுக்கொண்டு பதிலை கேளுங்கள் என கூறினார், அதன்பின்னர் இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இரண்டாவது துணைக் கேள்வியை கணேசமூர்த்தி மீண்டும் தமிழில்தான் கேட்பேன் என்று கூறி கேள்வி எழுப்பினார், அதற்கும் அமைச்சர் கோயல் மீண்டும் இந்தியிலேயே பதில் அளித்தார்.
கடந்த வாரம், காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியபோது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார், இது உறுப்பினர்களை அவமதிக்கும் செயல் என சசி தரூர் கருத்து தெரிவித்தார்.