உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணைக்கட்ட மாட்டோம் என காவிரி நடுவர்மன்ற தொழில்நுட்பக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.
காவிரி மேற்பார்வைக் குழுவின் மாதாந்திரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிராபகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியன், கர்நாடக தலமை செயலளர் சுபாஷ் சந்திர குன்டியா, நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நீர் நிலவரம் குறித்த வெளிப்படைத் தன்மை நிலவ இரு மாநிலங்களும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகா செயல்படாது என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நீரை வழங்க வேண்டும் எனவும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.