இந்தியா

“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை 

“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை 

webteam

மைசூர் பாக்கிற்காக தமிழ்நாட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதாக தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் மைசூர் பாக்கிற்கு புவிசார் குறியீடு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி பரப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஆனந்த் ரங்கநாதன் என்பவரின் ஒரு கிண்டலான ட்வீட்தான். ஏனென்றால் ஆனந்த் ரங்கநாதன்  தனது ட்விட்டர் பக்கத்தில், “மைசூர் பாக்கிற்கு புவிசார் குறியீடு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ஆணையை நான் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மைசூர் பாக்கிற்காக புவிசார் குறியீடு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி பரப்பட்டது. குறிப்பாக ஒரு செய்தி நிறுவனம் இது தொடர்பாக ஒரு விவாதத்தையும் நடத்தியது. அத்துடன் மைசூர் பாக்கு உருவான வரலாற்றையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. இது கர்நாடகாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடகாவும் தமிழ்நாடும் மைசூர் பாக்கிற்கு புவிசார் குறியீடு கேட்டு கொண்டிருக்கின்றன என்று செய்தி வெளியானது. அப்போது ஆனந்த் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “1835ஆம் ஆண்டே இந்திய நாடாளுமன்றத்தில் மைசூர் பாக்கு தமிழ்நாட்டில் உருவானது என்று லார்ட் மெக்காலே பேசி உள்ளார்” எனக் கூறி அந்தப்பேசுக்கான ஆவணப் புகைப்படத்தையும் உடன் சேர்த்து பதிவிட்டிருந்தார். இதுவும் கர்நாடகவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஒரு வீடியோ பதிவில் மைசூர் பாக்கு குறித்து ஒரு கதையையும் இவரே கூறியிருக்கிறார். அந்தக் கதையும் ஒரு காமெடி கதைதான். அதையும் உண்மையென நினைத்து சிலர் விவாதித்து வருகின்றனர்.