தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் பாதிக்கப்பட்ட 11 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது விந்தியா ஆர்கானிக் என்ற ரசயான தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 11 தொழிலாளர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். தீப்பற்றிய ரசாயன ஆலைக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து குறித்து பேசிய சங்காரெட்டி மாவட்ட தீயனைப்பு அதிகாரி சீனிவாஸ் "ரசாயன தொழிற்சாலைில் இருக்கும் ரியாக்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது" என்றார்.
மேலும் "இப்போதைக்கு வெளியே இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தீயின் அளவு குறைந்ததும் உள்ளே செல்வோம். உள்ளே இன்னும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள் என தெரியவில்லை" என்றார் அவர்.