குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வெளியாகி வரும் நிலையில், இதில் தங்களுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கியை வைத்து தாங்கள் தேசிய கட்சியாக உருவெடுக்கப்போவதாக டெல்லி துணை முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் “முதன்முறையாக தேசிய அரசியலில் கல்வியும் சுகாதாரமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தேசத்திற்கு, என் வாழ்த்துகள்” என்றிருக்கிறார். மேலும் “ஆம் ஆத்மி கட்சி, இன்று முதல் குஜராத் வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்து தேசிய கட்சியாக உருவெடுக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை அடைய அக்கட்சிக்கு இன்னும் ஒரு மாநிலத்தில் வாக்கு வங்கி உயர்வதே தேவைப்பட்டது. அதை இன்று அக்கட்சி பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக அதிகாரபூர்வமாக ஒரு கட்சி `தேசிய கட்சி’ என்ற அந்தஸ்தை பெற, அக்கட்சிக்கு குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்; ஒரு மாநிலத்தில் மாநில கட்சியாக அங்கீகாரம் இருக்கவேண்டும்; 2 சீட்களாவது வெற்றிப்பெற்றிருக்க வேண்டும்; சட்டமன்ற தேர்தலில் 6% ஓட்டு வங்கி இருக்க வேண்டும் என்பவை விதிகள்.
இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு இப்போதைக்கு குஜராத் அல்லது இமாச்சலத்தில் 2 சீட்களும் 6 சதவிகித வாக்குகளும் தேவைப்படுகிறது. அது கிடைத்துவிட்டால் அக்கட்சி தேசிய கட்சியாகிவிடும். இந்த அடையாளம் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும்பட்சத்தில், தேசிய அளவில் அக்கட்சியின் நோக்கம் விரிவடைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி (டிச.8 மதியம் 1.45 நிலவரப்படி) ஆம் ஆத்மி குஜராத்தில் 182 தொகுதிகளில் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது; இமாச்சலத்தில் எங்கும் முன்னிலையில் இல்லை.