இந்தியா

அரசு நிறுவனங்களில் இனி 5 நாட்கள் தான் வேலை - மணிப்பூர் அரசு அறிவிப்பு

அரசு நிறுவனங்களில் இனி 5 நாட்கள் தான் வேலை - மணிப்பூர் அரசு அறிவிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில, முதல்வராக என். பிரென் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

இதனிடையே, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 6 நாட்களாக இருந்து வரும் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கப்படும் என பிரென் சிங் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில், இந்த திட்டத்துக்கு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூர் அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் இனி வாரத்துக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தான் வேலை நாட்கள் ஆகும்.

கோடைக்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் அரசு நிறுவனங்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.