இந்தியா

’இறந்து’ போனவரிடம் விசாரணை நடத்திய போலீஸ்!

’இறந்து’ போனவரிடம் விசாரணை நடத்திய போலீஸ்!

webteam

ஆக்ராவைச் சேர்ந்தவர் குஷ் சாராஸ்யா. ஞாயிற்றுக்கிழமை அன்று இவரை பாம்பு கடித்துவிட்டது. அங்குள்ள எஸ்.என். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இந்நிலையில் குஷ் சாவ்ராஸ்யா வீட்டுக்கு நேற்று ஒரு போலீஸ்காரர் வந்தார். வாங்க என்று வரவேற்ற குஷ்சின் மனைவி ரிச்சா, போலீஸ்காரருக்கு டீ கொடுத்தார். பிறகு முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்ட போலீஸ்காரார், ‘மனசை திடப்படுத்திக்குங்கம்மா. உங்க கணவர் இறந்துட்டாரு. அவரை பற்றிய டீட்டெய்ல் வேணும்’ என்றார். ரிச்சாவுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் அவர் கணவர் வீட்டுக்குள்தான் இருந்தார்.

‘இல்லைங்க நீங்க தப்பா சொல்றீங்க. அது என் கணவர் இல்லை’ என்றார் ரிச்சா. பிறகு, ‘இது குஷ் சாராஸ்யா வீடு தானே. அப்ப அவர் இறந்துட்டாருங்க. ஆஸ்பத்திரில சொல்லிதான் வர்றேன்’ என்று போலீஸ்காரர் அடம்பிடித்தார். இந்த நேரத்தில் திடீரென்று அவர் முன் வந்து நின்றார் குஷ். ‘நான் தான் நீங்க இறந்து போனதா சொல்ற ஆள்’ என்றார். நம்பாத போலீஸ்காரர் அவர் பற்றி மேலும் ஆதாரங்களை கேட்டார். பிறகு, ‘அப்ப ஆஸ்பத்திரியில ஏதும் தவறு நடந்திருக்கும்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதுபற்றி குஷ் சாராஸ்யா கூறும்போது, ‘இது காமெடியா இருந்தது. போலீஸ்காரர்ட்ட எப்படி ரியாக்ட் பண்ணன்னு தெரியல. நான் உயிரோடதான் இருக்கேன் அப்படிங்கறதுக்கு நிறைய ஆவணங்களை கொடுத்து நம்ப வைக்க வேண்டியதா போச்சு. பாம்புக் கடிச்சதும் ஆஸ்பத்திரிக்கு போனேன். செக் பண்ணிட்டு, விஷம் ஏதும் ஏறலை. நீங்க நல்லா இருக்கீங்கன்னு டாக்டர்கள் அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்தா போலீஸ் வருது’ என்று சிரிக்கிறார். 
இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.