உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு குற்றவாளி இல்லை என நிரூபணமாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் 2000ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ஆம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் பள்ளியிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போதே அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளிவந்தார். இருப்பினும், தீர்ப்பு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் அவர் குற்றவாளி இல்லை என்பது நிரூபணமானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’நான் செய்யாத குற்றத்திற்காக என்மீது விழுந்த பாலியல் குற்றவாளி என்ற பழி, ஒருவழியாக இத்தோடு நீக்கப்பட்டுவிட்டது. நான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டேன். இத்தனை வருடங்களாக என்மீதிருந்த இந்த களங்கம் எனக்கும், என் குடும்பத்திற்கும் கஷ்டத்தையும், வலியையும், அவமானத்தையும் கொடுத்தது. இருபிரிவினருக்கு இடையேயான நிலத் தகராறில் நான் இந்த பிரச்னையில் இழுத்துவிடப்பட்டேன். இதனால் நான் படாத கஷ்டமில்லை’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.