இந்தியா

ரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்! - குவியும் பாராட்டு

ரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்! - குவியும் பாராட்டு

webteam

நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வேண்டுமென்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இஸ்லாமிய இளைஞருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பனுல்லா அகமது(26). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது அறை நண்பனான தபாஷ் பகவதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். தபாஷ் பகவதி, தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். 

இந்நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  ராஜன் என்பவருக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்கவில்லை. இதனை தன் அறை தோழன் பானுல்லாவிடம் சொல்ல, பானுல்லாவே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுத்தால் சரிவராது என தபாஷ் அதனை ஏற்கவில்லை. ஆனால் நிலைமையை உணர்ந்த பானுல்லா பிடிவாதமாக மருத்துவமனைக்குச் சென்று ஒரு யூனிட் ரத்தத்தை நோயாளிக்கு கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய தபாஷ் பகவதி, ''பானுல்லா ரத்தம் கொடுப்பாக கூறியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் நோன்பில் இருப்பதால் அதற்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவன் பிடிவாதமாக ரத்தம் கொடுத்துவிட்டான்'' என்று தெரிவித்துள்ளார்.

ரத்ததானம் செய்தது குறித்து பேசிய பானுல்லா அகமது, ''ரத்தம் வேண்டும் என்றதும் நான் கொடுக்க தயாரானேன். இது குறித்து எங்கள் மத பெரியவர்களுடன் ஆலோசித்தேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்யக் கூறினர். மேலும் ரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ளக் கூறியும் அறிவுரை வழங்கினர்'' என தெரிவித்துள்ளார்.

பானுல்லாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த நோயாளி ராஜனின் மைத்துனர், ''நோன்பை பாதியில் விட்டுவிட்டு பானுல்லா ரத்ததானம் செய்தது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் ''அவருக்கு நாங்கள், பதில் உதவியாக எதையாவது கொடுக்க நினைத்தோம் அவர் எதையுமே வாங்கிக்கொள்ளவில்லை'' என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.