இந்தியா

எதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு நினைக்கிறது - மம்தா பானர்ஜி

எதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு நினைக்கிறது - மம்தா பானர்ஜி

webteam

ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை எதிர்த்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேராவிற்கு வீடு உள்ளதா‌வும், அச்சொத்து சட்ட விரோத ப‌ணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்‌டதாகவும் அமலா‌க்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் வதேராவை கைது செய்ய வரும் 16-ஆம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

இந்நிலையில், ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்காகவே இது போன்று நடத்தப்படுவதாகவும் யாருக்கு வேண்டுமானாலும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கிறோம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.