புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்தார். அவர் மேற்கு வங்காளம் வந்து சேர்ந்தபோது மரபுப்படி பிரதமரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வரவில்லை. ஆளுநர் ஜக்தீப் தங்கர் மட்டுமே அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று புயல் சேதங்களை பார்வையிட அழைத்துச் சென்றார்.
விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்காள சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டது மம்தா பானர்ஜிக்கு கோபம் உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. பிரதமரை தான் தனியாக சந்திக்க விரும்பியதாக அதிகாரிகள் மூலம் தகவல் அனுப்பிய பானர்ஜி, கூட்டத்தைப் புறக்கணித்தார்.
பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜக்தீப் தங்கர் சிறிது நேரம் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக காத்திருந்தனர். பின்னர் மம்தா பேனர்ஜி இல்லாமலே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுவேந்து அதிகாரி சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின், இன்று பிரதமர் ஒடிசா மாநிலத்தில் இதேபோல ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது முதலமைச்சர் நவீன் பட்நாயக் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபற்றனர். பொதுவாக முதல்வர் உள்ளிட்டோர் இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமருடன் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது இன்னும் சட்டசபை தேர்தல் பிரச்சார சமயத்தில் உருவான மனக்கசப்புகள் நீங்கவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
புயல் சேதங்களை நேரில் பார்வையிட திகா பகுதிக்கு செல்ல வேண்டியிருந்ததால் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுந்தர்பன் மற்றும் திகா ஆகிய பகுதிகளில் சேதம் கடுமையாக இருப்பதால், புனரமைப்புக்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளம் ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் சமீபத்தில் வங்காள விரிகுடா கடலில் உருவாகி கிழக்கு கரையோர மாநிலங்களை தாக்கிய யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- கணபதி சுப்ரமணியம்