இந்தியா

மம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு

மம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு

webteam

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து பின்னர் விடுவித்தனர்.

இதனிடையே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு, கூட்டாட்சி அமைப்பை சிதைக்கப் பார்க்கிறது என்றும் கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தர்ணா போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் திமுக சார்பில் எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை’’ என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், மேற்கு வங்காளத்திற்கு சென்ற கனிமொழி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.