மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பல நாட்களாக கருத்து மோதல் நீடித்துவந்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கும் பிரச்னையில், 2 சீட்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்குவோம் என்றும், இதற்கு முந்தைய 2019 தேர்தல் மற்றும் 2021 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் குறைவான வாக்குகள் மட்டுமே காங்கிரஸ் பெற்றதால் அதிகப்படியான சீட்டுகள் ஒதுக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் திடகாத்திரமாக தெரிவித்தது.
இந்நிலையில் கருத்து மோதல் முற்றிய நிலையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். பாஜகவை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி ஒன்று உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ்தான். தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை வலுப்படுத்த காங்கிரஸ் சிபிஐ(எம்) உடன் இணைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் இணையவில்லை. எனினும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் பாஜகவை அரசியல்ரீதியாக எதிர்த்துப் போராடும் திறன்கொண்டது.
சட்டசபையில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இரண்டு எம்.பி. சீட் தருவதாக கூறினோம். அத்துடன் அவர்களுடைய வெற்றிக்கு உதவுவதாகவும் சொன்னோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். தங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் எனக் கேட்டனர். இதனால் அவர்களது கோரிக்கையை நிராகரித்தோம். அதன்காரணமாகவே தொகுதிப் பங்கீட்டு பிரச்னை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேற்குவங்கத்தில் ஒரு சீட் கூட கொடுக்க முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் இன்னும் i-n-d-i-a கூட்டணியிலேயே உள்ளது” என்று மால்டாவில் பாதயாத்திரை மேற்கொண்ட மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில், முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, முடிந்தால் குஜராத்தில் பாதயாத்திரை மேற்கொள்ளுங்களேன் என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.
முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால், 40 இடங்களை கூட வெல்வார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் ஏன் உங்களுக்கு இவ்வளவு திமிர்? உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் வாரணாசியில் பாஜகவை தோற்கடித்து காட்டுங்கள். ஆனால் உங்களால் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்விதான் அடையமுடிகிறது.
உங்களால் ராஜஸ்தானில் வெல்லமுடியவில்லை, முடிந்தால் அங்குசென்று வெல்ல முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள், வாரணாசியில் வெற்றி பெறுங்கள். நீங்கள் அந்தளவு தைரியமான கட்சியா என்று பார்ப்போம்!” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா குறித்து விமர்சித்து பேசிய அவர், “இப்போது ஒரு புதிய பாணி வெளிவந்துள்ளது... பாத யாத்திரை என்ற பெயரில் போட்டோ ஷூட். இதுவரை எங்கும் செல்லாதவர்கள், சென்று மக்களை சந்திப்பதை போல் பிம்பத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் பீடித் தொழிலாளர்களுடன் அமர்ந்திருப்பதையும், டீக்கடையில் அமர்ந்திருப்பதையும் அந்த ஃபோட்டோ ஷூட் காட்டுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வந்தவர்கள். அதுவரை அவர்களின் வாழ்க்கையை யாரும் பார்க்கவில்லையே” என்று கடுமையாக விமர்சித்தார்.
சில நாட்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி பீடி விற்பனை செய்யும் தொழிலாளர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோவை காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.