அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. டேவிஸ் நகரிலுள்ள பூங்காவில் 6 அடி உயரத்தில் உள்ள காந்தியின் வெண்கல சிலையின் கால் பகுதியை சிலர் உடைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சேதமடைந்த காந்தி சிலை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. காந்தியின் 74 ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலையை சேதப்படுத்தியது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காந்திசிலை சேதமடைந்தது குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த சிலை 2016ஆம் ஆண்டு டேவில் நகரில் வைக்க இந்தியாவால் பரிசளிக்கப்பட்டது. எனவே காந்தி சிலை அவமதிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.