இந்தியா

கிச்சடியில் உப்பு அதிகம்: ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவன்

கிச்சடியில் உப்பு அதிகம்: ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவன்

ச. முத்துகிருஷ்ணன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவில் அதிக உப்பைக் சேர்த்து பரிமாறியதால் கோபமடைந்த கணவன் மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் பயந்தர் டவுன்ஷிப்பில் நிலேஷ் காக், அவரது மனைவி நிர்மலாவுடன் வசித்து வந்தார். 46 வயது நிரம்பிய நிலேஷ் காக், காலை உணவு சாப்பிட வந்து அமர்ந்துள்ளார். அவருக்கு மனைவி நிர்மலா அரிசி பருப்பால் செய்யப்பட்ட “கிச்சடி”-ஐ பரிமாறியுள்ளார். கிச்சடியில் உப்பு அதிகமாக இருந்ததால் நிலேஷ் கோபமடைந்துள்ளார். மனைவியுடன் அவர் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி மனைவியை தாக்கத் துவங்கியுள்ளார் நிலேஷ். கோபத்தின் உச்சியில், நீண்ட துணியைப் பயன்படுத்தி ம்னைவி நிர்மலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் நிலேஷ். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நவ்கர் நகர் காவல்துறையினர் நிலேஷை கைது செய்தனர்.

நிலேஷின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவி 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிர்மலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். இந்த கொலைச் சம்பவத்துக்கு வேறு ஏதேனும் தூண்டுதல் உள்ளதா என்பதை தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.