பாலாசாஹேப் ஷிண்டே  முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா | வாக்களிக்க சென்ற சுயேட்சை வேட்பாளர்.... மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்!

மகாராஷ்டிராவில் வாக்குசாவடி மையத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார் பீட் தொகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65% வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீட் தொகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாசாஹேப் ஷிண்டே

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரைச் சேர்ந்தவர் பாலாசாஹேப் ஷிண்டே. இவருக்கு வயது 43. இவர் சத்ரபதி ஷாஹூ வித்யலயா வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்துவதற்காக மதியம் 2 மணி அளவில், சென்றிருக்கிறார். அப்போது திடீரென தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முதலுதவிக்குப் பின்னர், வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலாசாஹேப் ஷிண்டே

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன்படி தேர்தலின்போது ஒரு வேட்பாளர் இறந்தால் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிப்பதை பிரிவு 52ன் கீழ் ஒத்திவைக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.

பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணியில் தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி நடைபெற்று வரக்கூடிய சூழலில், அடுத்து புதிதாக ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற போட்டி அங்கு நிலவி வருகிறது.