இந்தியா

’அணை உடைய நண்டுதாங்க காரணம்’: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

’அணை உடைய நண்டுதாங்க காரணம்’: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

webteam

மகாராஷ்ட்ராவில் அணை உடைந்ததற்கு நண்டுதான் காரணம் என்று அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லூன் தாலுகாவில் உள்ள, திவாரே அணை நிரம்பி வழிந்தது. கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்து அணையை ஒட்டியுள்ள 7 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. 12 வீட்டுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. 23 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்துக்கு ஆளும் கட்சியின் அலட்சியப்போக்குத்தான் காரணம் என்றும் அணையை கட்டிய ஒப்பந்தக்காரர் சிவசேனா எம்.எல்.ஏ, சதானந்த் சவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் (Tanaji Sawant ), அணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

’’இந்த அணை 2004 ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது. கட்டப்பட்டதில் எந்த பிரச்னையும் இல்லை. அணையில் நண்டுகளால் தான் பிரச்னை. அதிக அளவில் இருந்த நண்டுகளால் அணையின் தடுப்பு பலவீனம் அடைந்துள்ளது. அதனால் உடைப்பு ஏற்பட்டது. இருந்தாலும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் முடிவில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்’’ என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த ’நண்டு’ பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், ’’அணையை கட்டிய ஊழல் சுறாவை பாதுகாப்பதற்காக, அப்பாவி நண்டுகள் மீது பழிசுமத்துவதா? இது சகித்துக்கொள்ள முடியாதது. அணையை கட்டிய ஒப்பந்தக்காரர் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

ரத்னகிரியை சேர்ந்த கிராமப்புற மேம்பாட்டு கமிட்டியின் தலைவர் சுஹாஸ் கண்டகாலே கூறும்போது, ’’நண்டுகள் அணைக்கு கீழே இருந்து அதை பலவீனப்படுத்திக் கொண்டிருந்த போது, அமைச்சர் நீருக்கடியில் படம்பிடிக்கச் சென்றாரா? மக்களின் உணர்வுடன் விளையாடுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது’’ என்றார்.