ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியும், சரத் பவாரும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 370 பிரிவை நீக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி சிறப்பான பணியை செய்துள்ளதாக பாராட்டிய அமித்ஷா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முடிவை ஏன் எதிர்க்கின்றன என்று சாடினார்.
மேலும், ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் எனவும் அமித்ஷா பேசினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு இந்தியாவின் மீதான பார்வை மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.