மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் பைஜ்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பு சிங். இவர், கடந்த ஜூலை 19ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், ”சோண்ட்வா காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு காவலர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். அவர்கள் என் மனைவியைத் தாக்கிவிட்டு வீட்டிலிருந்து 240 தங்க நாணயங்களை எடுத்துச் சென்றனர். குஜராத்துக்கு நானும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் வேலைக்குச் சென்றபோது இந்த தங்கக் காசுகள் எங்களுக்கு கிடைத்தன. 7.98 கிராம் எடையுள்ளவை அவை” என தெரிவித்திருக்கிறார். விசாரணையில் ‘அந்த நாணயங்கள் 1922ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளவை. மேலும், அந்த நாணயங்கள் 90 சதவிகிதம் சுத்தமான தங்கத்தாலான ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள்’ என தெரிய வந்துள்ளது.
பின்னர் இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய அலிராஜ்பூர் போலீஸ் உயரதிகாரி ஷ்ரத்தா சோன்கரால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது திருட்டு வழக்கு பதிவுசெய்து, அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும், எஃப்.ஐ.ஆரில் ஒரு காவலரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், மற்ற மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தச் செய்தியறிந்து காவல் நிலையம் சென்ற அலிராஜ்பூர் தொகுதி எம்எல்ஏவும், மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவருமான நாகர் சிங் சௌஹான், தங்க நாணயங்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தார். மேலும் அவர், ‘நான்கு போலீசாரையும் கைது செய்யாவிட்டால், சோண்ட்வாவில் போராட்டம் நடத்தப்படும்’ என எச்சரிக்கையும் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, சாட்சியங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”தற்போது விசாரணை நியாமானதாக இருக்க வேண்டும். யாரும் இதில் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.