இந்தியா

ம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..!

ம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..!

PT

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கினார். மேலும், அக்கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதில், ம.பி அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். மீதமுள்ளவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில், இன்று ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனிடையே கமல்நாத் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி பாஜக மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே, கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.