இந்தியா

சுற்றுச்சூழல் சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட லுலு வணிக வளாகம் 

சுற்றுச்சூழல் சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட லுலு வணிக வளாகம் 

webteam

லுலு வணிக வளாகத்திற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த வளாக நிர்வாகம் கேரள உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் லுலு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக எம்.கே. சலீம் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் லுலு வணிக வளாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடிக்கு மேலான பரப்பளவில் கட்டப்பட்டதால் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் தந்திருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் லுலு வணிக வளாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். 

இந்நிலையில் உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸூக்கு லுலு வணிக வளாகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், “எங்களுக்கு கேரள சுற்றுச்சூழல் துறை முறையாக அனுமதி வழங்கியது. மேலும் இந்தக் கட்டடத்தில் அனைத்து விதிமுறைகள் சரியாக பின்பற்றபட்டது. 

லுலு வணிக வளாகம் குடியிருப்பு (Township) பகுதி திட்டத்தின் கீழ் வருகிறது. குடியிருப்பு திட்டத்தின்கீழ் வரும் கட்டிடங்கள் 3 லட்சம் சதுரடிக்கு குறைவாக இருந்தால் அதற்கு மாநில சுற்றுச் சூழல் அமைச்சகமே அனுமதி தரலாம். அந்தவகையில் லுலு வணிக வளாகம் மொத்தமாக 2 லட்சத்து 32ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது. ஆகவே மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரமாண பத்திரம் குறித்து மனுதாரர் சலீம் பதில் தர கால அவகாசம் அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.