இந்தியா

உ.பி.யில் சம்பவம்: பள்ளிகளில் 800 மாடுகளை அடைத்த உள்ளூர்வாசிகள்!

உ.பி.யில் சம்பவம்: பள்ளிகளில் 800 மாடுகளை அடைத்த உள்ளூர்வாசிகள்!

webteam

பள்ளியில் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, மாடுகளை அடைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து பசுக்கள் மீது அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்நிலையில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என நேற்று அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வயல்களில் பயிர்களை மேய்ந்து சேதப்படுத்துவதாக, சுமார் 800 மாடுகளை பள்ளிகளில் அடைத்த சம்பவமும் நேற்று நடந்துள்ளது.

அங்குள்ள அலிகார் மாவட்டத்தின் இக்லாஸ் அருகில் உள்ள கேசர் காங்கிரி, அட்ரவ்லி உட்பட சில கிராமங்களில் விவசாய நிலங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இங்கு ஏராளமான மாடுகள் தெருவில் சுற்றி வருகின்றன. இந்த மாடுகள் வயல்களில் சென்று பயிர்களை மேய்ந்துவிடுவதால் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்து விவசாயிகள், ஒரு முடிவெடுத்தனர். அதன்படி, தெருவில் திரிந்து கொண்டிருந்த சுமார் 800 மாடுகளை பத்திக்கொண்டு அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றனர். அங்கிருந்த மாணவர்களை வெளியேற்றினர். பின்னர் மாடுகளை பள்ளியில் அடைத்து கேட்டை பூட்டிவிட்டனர். சில மாடுகளை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடைத்து பூட்டியுள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுபற்றி சோனியா வர்மா என்ற ஆரம்ப பள்ளி ஆசிரியை கூறும்போது, ‘’கடந்த 3 நாட்களாக இந்த மாடுகள் இங்குதான் இருக்கின்றன. இந்த சம்பவத்தால் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். மாணவர்கள் பயந்துபோயுள்ளனர். பள்ளி சுற்றுச்சுவர் முழுவதும் அசுத்தமாகிவிட்டது. இந்த பிரச்னை எப்போது முடியும் என்று தெரியவில்லை. எங்கள் மேலதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்து விட்டோம்’’ என்றார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட் சிபி சிங் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ’’இது வழக்கத்துக்கு மாறான சம்பவம். சிலர் அரசியல் ரீதியாக இதை செய்துவருகின்றனர். இப்படி செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.