இந்தியா

திருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் !

திருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் !

jagadeesh

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் 60 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்னும் சில மாநிலங்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. தமிழகமும் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கோயிலில் 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி "திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஜூன் 11 முதல் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 11 முதல் தினமும் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம்; 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த சுப்பா ரெட்டி " ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாதவர்களுக்குத் திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்ட்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும். பக்தர்களுக்கு கொரோனா இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" எனக் கூறியுள்ளார்.