ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டின் கொடூர பிடியில் பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்யாத இணைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவில் தொடங்கி, பல்வேறு நாடுகளில் ஊடுருவி விட்ட ப்ளூவேல் சூசைட் கேம் என்ற ஆன்லைன் விளையாட்டு சர்வதேச அளவில் ஏராளமான உயிர்களை பலிகொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிய மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அண்மையில் தற்கொலை செய்துகொண்டான். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டான். இவர்கள் புளூவேல் விளையாட்டின் ஒவ்வொரு கட்டங்களையும் கடந்து இறுதிகட்டத்தை எட்டும்போது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தெரியவந்தது.
இந்நிலையில், கேரளாவில், சாவன்ந்த் என்ற 22 வயது இளைஞன் ஒருவன் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான் இறப்பதற்கு முன் அந்த இளைஞர் பிளேடால் கைகளை அறுப்பதும் பாலத்தின் உச்சியில் நின்றதுமாக இருந்தபோது மனநிலை சரியில்லை எனக்கூறி சிகிச்சை அளித்து வந்தனர் அவரது பெற்றோர். இது ப்ளூவேல் விளையாட்டின் கோர முகம் என்று தற்போதுதான் தெரியவந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுவன் ஓருவன் நேற்று தற்கொலை செய்துகொண்டான். இந்த சிறுவன் அண்மையில் புளூவேல் விளையாட்டை விளையாடி வந்ததாக அவனது தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ப்ளூவேல் விளையாட்டை முற்றிலும் தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுந்த நிலையில், கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாஹு நிறுவனங்கள் இந்த விளையாட்டையும், அதன் தொடர்பு வலையையும் அகற்ற மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரை இந்த ஆபத்தான விளையாட்டு குறித்த புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இணைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.